From: aanaa
on 24th May 2017 08:10 AM
[Full View]
வில்லி கேரக்டரிலும் வெளுத்துகட்டும் ஷமிதா..
பாண்டவர் பூமி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி சின்னத்திரைக்கு வந்தவர் ஷமிதா. சிவசக்தி அவரது முதல் சீரியல். கடந்த 8 வருடங்களாக சின்னத்தரை தொடர்களில் நாயகியாக நடித்து வருகிறார். உடன் நடித்த ஸ்ரீயை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இதுவரை பாசிடிவான கேரக்டர்களில் நடித்து வந்த ஷமிதா, தற்போது மவுனராகம் தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். அதிக மேக்அப் போட்டு கண்களை உருட்டி மிரட்டி பேசும் வழக்கமான வில்லியாக இல்லாமல் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக காரியம் சாதிக்கும் வில்லியாக நடித்து வெளுத்துக்கட்டி வருகிறார்.
"நான் வில்லியாக நடிக்க வேண்டும் என்று என் கணவர் வற்புறுத்தி வந்தார். ஆனால் எனக்கு தயக்கம் இருந்தது. இயக்குனர் தாய் செல்வம் இது வழக்கமான வில்லி கேரக்டர் இல்லை. கணவன் மீது உயிரை வைத்திருக்கும் மனைவி, அதற்கு பங்கம் வரும்போது வில்லியாக மாறுவார். அதுவும் கணவன் மீது கொண்ட அதீத அக்கறையால் தான். அதனால் ஓவர் ஆக்டிங், ஓவர் மேக்கப் எதுவும் தேவையில்லை. இயல்பாக நடித்தால் போதும் என்று சொல்லி நம்பிக்கை தந்தார். நானும் அப்படியே நடித்தேன். அது ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது" என்கிறார் ஷமிதா.
நன்றி: தினதந்தி
From: aanaa
on 24th May 2017 08:12 AM
[Full View]
சினிமா இயக்கப்போகிறார் நிவேதிதா.
கடந்த 5 வருடங்களுக்கு மேலாக மியூசிக் சேனல்களின் நட்சத்திர தொகுப்பாளினியாக இருக்கிறார் நிவேதிதா. தற்போது செந்தமிழ் பெண்ணே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். விரைவில் சினிமா ஒன்றை இயக்கும் முயற்ச்சியில் இருக்கிறார் நிவேதிதா.
சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்புகளையெல்லாம் எனக்கு நடிப்பு வராது என்று மறுத்தவர், இப்போது சினிமா இயக்கத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக தமிழ், இந்தி, ஆங்கிலம், கொரியன் படங்களை பார்த்து வருகிறார். "சின்ன வயசிலிருந்தே எனக்கு கதை கேட்கவும், சொல்லவும் பிடிக்கும். சினிமாவிலும் இயக்குனராகி கதை சொல்ல ஆசை. நடிப்பு எனக்கு வராது என்று எனக்கே தெரியும். அதனால் தான் அந்தப்பக்கம் போகவில்லை. இப்போது சீரியசாகவே ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் படம் இயக்குவேன்" என்கிறார் நிவேதிதா.
நன்றி: தினதந்தி
From: aanaa
on 24th May 2017 08:15 AM
[Full View]
சிஐடி ஆக வேண்டும் என்பதுதான் எனது ஆசை -சீரியல் நடிகை ஸ்ரீதேவி .
தற்போது சின்னத்திரைகளில் கல்யாண பரிசு , ராஜா ராணி, பூவே பூச்சூடவா ஆகிய தொடர்களில் நடித்து வருபவர் ஸ்ரீதேவி. எதிர்காலத்தில் சிஐடி ஆக வேண்டும என்பதுதான் எனது ஆசை. அதனால் எம்எஸ்சி கிரிமினாலஜி படித்து வருகிறேன் என்கிறார் அவர் மேலும் ஸ்ரீதேவி கூறுகையில், நான் 2008ல் சின்னத்திரையில் நடிக்க வந்தேன். முதலில் தெலுங்கில் இரண்டு சீரியல்களில் நடித்த பிறகு, செல்லமடி நீ எனக்கு தொடர் மூலம் தமிழுக்கு வந்தேன். பின்னர், தங்கம், இளவரசி, பிரிவோம் சந்திப்போம், வாணி ராணி என பல தொடர்களில் நடித்தேன். பாசிட்டிவ், நெகடீவ் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடித்திருக்கிறேன். என்றாலும், நெகடீவ் வேடங்கள்தான் எனக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தன.
இப்போதுகூட கல்யாண பரிசு, ராஜாராணி தொடர்களில் நெகடீவ் ரோல்களில்தான் நடித்துக்கொண்டிருக்கிறேன். அந்த மாதிரி தொடர்களில் எனது நடிப்பு பெரிய அளவில் பேசப்படுவதால் நெகடீவ் கதாபாத்திரங்கள் மீது எனக்கான ஈடுபாடு அதிகரித்து விட்டது.
மேலும், படிப்பில் எனக்கு ஆர்வம் மிகுதி என்பதால் நடித்துக்கொண்டே படித்து வரும் நான், எதிர்காலத்தில் சிஐடி ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் தற்போது எம்எஸ்சி கிரிமினாலஜி படித்து வருகிறேன். அதுதவிர, பெட் அனிமல் துறையிலும் ஒர்க் பண்ணிக்கொண்டிருக்கிறேன். அது எனக்கு நல்ல பொழுதுபோக்காகவும் உள்ளது என்று கூறும் ஸ்ரீதேவிக்கு, சினிமாவில் நடிக்கும் ஆசையெல்லாம் இல்லையாம். சீரியலில் நடிப்பது, படிப்பதற்கே நேரம் போதுமானதாக உள்ளது என்கிறார்.
நன்றி: தினதந்தி
From: aanaa
on 24th May 2017 08:17 AM
[Full View]
கதாசிரியர் ஆனார் அப்சரா .
மலையாள சின்னத்திரையிலிருந்து தமிழுக்கு வந்தவர் அப்சரா. பல சீரியல்களில் விதவிதமான கேரக்டர்களில் நடித்து வந்த அப்சரா தற்போது மரகதவீணை சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். அப்சராவின் புதிய அவதாரம் கதாசிரியர். தற்போது ஒளிபரப்பாகி வரும் விதி தொடரின் கதையை எழுதியவர் அப்சரா. இதுவரை பல சிறு கதைகள் எழுதியுள்ள அப்சரா நிறைய நாவல்களையும் எழுதி வருகிறார். அப்படி எழுதப்பட்ட ஒரு நாவலையே விதி சீரியலுக்கான கதையாக மாற்றியிருக்கிறார்.
கூட்டுக் குடும்பமாக வாழ்கிறவர்கள். திருமணமான பிறகு பணம், வேலை, சேமிப்பு, எதிர்காலம் என்று சந்தோஷங்களை தொலைத்துவிட்டு ஓடுகிறவர்களின் கதை. தற்போது இந்த கதையின் பிளாஷ்பேக் பகுதிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் சில எபிசோட்களுக்கு பிறகு முக்கிய கதைக்கு வருகிறது சீரியல்.
"மாமியார் கொடுமை, கர்ப்பிணி கொடுமை என்று வழக்கமான கதையாக இல்லாமல் இன்றைய குடும்ப சூழ்நிலைகளை சுட்டிக் காட்டி நாம் எந்த மாதிரியான இயந்திரத்தனமான வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதை சுட்டுக்காட்டும் விதமாக விதியின் கதையை அமைத்துள்ளேன். சினிமாவுக்கு கதை எழுதுவீர்களா என்று கேட்கிறார்கள். ஒரு விஷயத்தை 2 மணிநேரத்துக்குள் சொல்வதற்கு நிறைய பயிற்சி வேண்டும். இப்போதைக்கு அதற்கு நான் தயாராக இல்லை. மலையாளத்தில் எழுதும் கதையை தமிழில் சொல்லி எழுத வைக்கிறேன். விரைவில் தமிழ் எழுத கற்றுக் கொள்வேன்" என்கிறார் அப்சரா.
நன்றி: தினதந்தி
From: aanaa
on 24th May 2017 08:20 AM
[Full View]
நான் எப்போதுமே இயக்குனர்களின் நடிகன் - சொல்கிறார் சஞ்சீவ் .
நம்பிக்கை, மெட்டிஒலி, அண்ணாமலை, மனைவி, பெண், திருமதி செல்வம் என பல மெகா சீரியல்களில் பாசிட்டீவ், நெகடீவ் வேடங்களில் நடித்தவர் சஞ்சீவ். திருமதி செல்வம் தொடரில் நடித்து சிறந்த நடிகருக்கான மாநில அரசு விருது பெற்றவர். தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும், யாரடி நீ மோகினி சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி.
.* சமீபகாலமாக உங்களை சீரியல்களில் பார்க்க முடியவில்லையே?
நான் சீரியல்களில் அதிகமாக நடித்திருந்தபோதும் சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அதனால் சீரியல்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு ஒரு படத்தில் நாயகனாக நடிக்க தயாராகிக்கொண்டிருந்தேன். கடந்த ஆண்டு நவம்பரில் அந்த படம் தொடங்க இருந்தது. ஆனால் அப்போது ஏற்பட்ட பணப்பிரச்சினை காரணமாக அந்த படம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், வருகிற ஜூன், ஜூலையில் அந்த படம் தொடங்குகிறது..
* யாரடி நீ மோகினி சீரியல் நேயர்களிடம் எத்தகையை வரவேற்பு பெற்றுள்ளது?
நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு என்னை பார்த்த நேயர்கள், இத்தனை நாளும் நீங்கள் ஏன் சீரியல்களில் நடிக்கவில்லை. மறுபடியும் உங்களை ஸ்கிரீன்ல பார்த்தது சந்தோசமாக உள்ளது என்று சொல்லி நல்ல ரெஸ்பான்ஸ் கொடுக்கிறார்கள். அதோடு, யாரடி நீ மோகினி சீரியல் சினிமா பார்த்த திருப்தியை கொடுப்பதாகவும் சொல்கிறார்கள். யாரடி நீ மோகினி சீரியல் ஒரு பேமிலி டிராமா. எல்லோருக்குமே இதில் முக்கியத்துவம் உள்ளது. மோகினி என்றொரு திரில்லர் மேட்டரும் உள்ளது. குழந்தைகளுக்கு அதுதானே பிடிக்கும். ரொம்ப விகாரமாக காட்டாமல் குழந்தைகளுக்கு பிடிக்கிற மாதிரி மோகினி கேரக்டர் இடம்பெற்றுள்ளது
.* சீரியல் கதைகளை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?
நான் எதிர்பார்ப்பது பியூர் எண்டர்டெய்ன்மென்டுதான். அதுக்கு நடுவுல அப்பப்ப ஒரு சின்ன மெசேஜ் வேண்டுமானால் கொடுக்கலாம். மற்றபடி கருத்து சொல்ல வேண்டும் என்று நான் நினைப்பதில்லை.
* சீரியல் நடிகர்களுக்கு சினிமாவில் வரவேற்பு எப்படி உள்ளது?
முன்பெல்லாம் சீரியல் ஆர்ட்டிஸ்ட் என்றால் சீரியலோட நிறுத்திக்கொள்வார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. டிரண்ட் மாறியிருக்கு. சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும் சினிமா டைரக்டர்கள் நல்ல வெயிட்டான வேடம் கொடுக்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய விசயம்
.* பேமிலி டிராமா தவிர என்னென்ன வித்தியாசமான கேரக்டர்கள் பண்ண ஆசை?
நான் டோட்டலாக ஒரு டைரக்டர் நடிகன்தான். டைரக்டர் என்ன நினைக்கிறாரோ அதை திரையில் கொண்டு வர நினைப்பேன். அந்த கேரக்டர் குறித்து டைரக்டர் மைண்டில் என்ன உள்ளதோ அதை வெளிப்படுத்தவே முயற்சி செய்வேன். அப்படித்தான் ஆரம்ப காலம் முதல் இப்போதுவரை நடித்து வருகிறேன். இனிமேலும் அப்படித்தான் நடிப்பேன்.
இப்போது நடித்து வரும் யாரடி நீ மோகினி சீரியல் பேமிலி டிராமா என்றாலும், இந்த சீரியலே சினிமா போன்று படமாக்கப்பட்டு வருகிறது. இதுவே ஒரு பெரிய வித்தியாசம்தான். முக்கியமாக, பாடல், சண்டை காட்சியெல்லாம் உள்ளது. சினிமா மாதிரி பிரமாண்டமாக தயாராகிக்கொண்டிருக்கிறது. சினிமா போன்று ஒரு சீரியலில் நடிப்பது ரொம்ப சந்தோசமாக உள்ளது. இது நேயர்களுக்கு மட்டுமின்றி எனக்கும் புதுமையான அனுபவமாக உள்ளது என்கிறார் சஞ்சீவ்.
நன்றி: தினதந்தி
From: aanaa
on 14th October 2017 07:55 AM
[Full View]
தயாரிப்பாளர் ஆனார் நீலிமா
தேவர் மகன் படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் கால் பதித்தவர் நீலிமா. அதை தொடர்ந்து நான் மகான் அல்ல, முரண், திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், மொழி, பண்ணையாரும் பத்மினியும், சத்ரு, மன்னர் வகையறா உட்பட 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரையில் நுழைந்த அவர் வாணி ராணி, தாமரை, தலையனை பூக்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட தொலைகாட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
நடிகையாக இருந்த நீலிமா இப்போது தயாரிப்பாளராகியிருக்கிறார். தனது கணவர் இசைவாணனுடன் இணைந்து இசை பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் தற்போது ஜீ தமிழ் தொலைகாட்சிக்காக "நிறம் மாறாத பூக்கள்" என்ற தொடரை தயாரிக்கிறது. முரளி, நிஷ்மா, அஸ்மிதா மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கவுதமி ரவி, டேவிட் ராஜ், தாரிஷ், நேகா, ஸ்ரீநிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இன்று இதன் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
"எனது 20 வருட கனவு இது. நானும் தயாரிப்பாளராக வேண்டும் என்கிற கனவு இன்று நிஜமாகி இருக்கிறது. சின்னத்திரையில் முதன்முறையாக தயாரிப்பாளராக கால் பதித்திருக்கிற நானும் என் கணவரும் பெரிய திரையிலும் தயாரிப்பாளராக கால் பதிக்க இருக்கிறோம்" என்கிறார் நீலிமா
நன்றி: தினமலர்
From: aanaa
on 14th October 2017 08:05 AM
[Full View]
தவறான உறவுகளை சித்தரிக்கும் சீரியல்களை குறைக்க வேண்டும்: ஜெயராம் மோகன்
சீரியல்களில் குடும்பங்களில் நடக்கும் நல்ல விசயங்களை எடுத்துக்கொண்டு தவறான உறவுகளை சித்தரிக்கும் கதைகளை தவிர்த்து விடுவது சீரியல்களின் தரத்தை அதிகப்படுத்தும் என்கிறார் நடிகர் ஜெயராம் மோகன்.
அவர் மேலும் கூறுகையில், சீரியல் என்பது மக்களின் வாழ்வோடு கலந்து விட்டது. சீரியல்களை பார்க்கும் நேயர்கள், அதில் வரும் பிரச்சினைகளை தங்களுக்கு ஏற்படுவது போலவே உணருகிறார்கள். இப்படி நேயர்களின் மனநிலை இருப்பதினால் தான் குடும்ப சூழலைக்கொண்ட சீரியல்கள் அதிகமாக வருகிறது .
குடும்ப பிரச்சினைகளில் தவறான உறவுகளை சித்தரிக்கும் கதைகளை குறைத்து விட்டு, நல்ல ஆரோக்யமான விசயங்களை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி, பொதுஅறிவு, விழிப்புணர்வு சம்பந்தமான விசயங்களை நிறையவே சேர்க்கலாம். காமெடி காட்சிகள் சீரியல்களில் இடம்பெறுவதே இல்லை. அதனால் ஒவ்வொரு சீரியல்களிலுமே காமெடியை அதிகப்படுத்தலாம். குழந்தைகள் சம்பந்தப்பட்ட நல்ல விசயங்களை சொல்லலாம்.
இப்படி சொல்லும் நடிகர் ஜெயராம் மோகன், இதுவரை நான் நடித்த பல சீரியல்களில் நெகடீவ் ரோல்களில் அதிகமாக நடித்திருக்கிறேன். அதில் வாணி ராணியில் நடித்த வில்லன் வேடம் என்னை பேச வைத்தது. அதைப்பார்த்து தாமரை சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அதில் பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டு விதமான வேடங்களில் நடித்தேன். இப்போது அழகு உள்பட இரண்டு சீரியல்களில் நடிக்கிறேன். இதில் எனது இமேஜ் மாறக்கூடிய அளவுக்கு நல்ல குணசித்ர வேடங்கள். அதனால் இந்த சீரியல்கள் ஒளிபரப்பாகும் போது எனக்கான வரவேற்பு இன்னும் நேயர்கள் மத்தியில் அதிகரிக்கும் என்று நினைக்கிறேன்.
சமீபகாலமாக சின்னத்திரைகளில் டப்பிங் சீரியல்களில் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இது வரவேற்க வேண்டிய விசயம். இப்படி சேனல்கள் மாறியிருப்பதால் தமிழ் சீரியல்களையே நம்பியிருக்கும் என்னைப்போன்ற நடிகர் நடிகைகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அதனால் இந்த நிலை தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார் ஜெயராம் மோகன்.
நன்றி: தினமலர்
From: aanaa
on 14th October 2017 08:07 AM
[Full View]
சீரியலுக்கு வருகிறார் ரேவதி
மண்வாசனை படத்தில் அறிமுகமானவர் ரேவதி. துளியும் கிளாமர் காண்பித்து நடிக்காமல் நல்லதொரு பர்பாமென்ஸ் நாயகியாக சினிமாவில் நீண்டகாலம் நாயகியாக நடித்து வந்தார். திருமணத்திற்கு பிறகும் சில படங்களில் நடித்த அவர், சமீபகாலமாக அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.
சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் அவரது அம்மாவாக நடித்த ரேவதி, அம்மா கணக்கு, ப.பாண்டி படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் யுத்தம் சரணம் உள்ளிட்ட சில படங்களில் அம்மா ரோலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஏற்கனவே ஓரிரு சீரியல்களில் நடித்துள்ள ரேவதி, தற்போது அழகு என்றொரு கிராமத்து நெடுந்தொடரில் லீடு ரோலில் நடிக்கிறார். அவரது கணவராக தலைவாசல் விஜய் நடிக்கிறார். குடும்பத்தலைவியாக அவர் நடித்து வரும் இந்த தொடரில் மையக் கேரக்டரில் நடிக்கும் ரேவதி, தனது குடும்பத்தில் நடக்கும் பெரிய பிரச்னைகளையெல்லாம் அனுபவத்தைக் கொண்டு எப்படி சிக்கல்களை சீராக்குகிறார் என்பதுதான் இந்த அழகு தொடரின் மையக் கதையாம். தற்போது இந்த சீரியலின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
நன்றி: தினமலர்
From: aanaa
on 5th November 2017 04:53 AM
[Full View]
மீண்டும் வந்தார் பிரியதர்ஷினி .
ஒரு காலத்தில் சின்னத்திரை பெரியதிரை இரண்டிலும் பிசியாக இருந்தவர் பிரியதர்ஷின். காப்பி வித் டிடியின் சகோதரி. தாவணி கனவுகள், இதய கோவில், புலி வருது உள்பட பல படங்களில் நடித்தார்.
பொதிகையில் ஒளிபரப்பான விழுதுகள் தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் அக்னி பரீட்சை, கனவுகள் இலவசம், மை டியர் பூதம், விசாலம், ரேகா ஐபிஎஸ், கோலங்கள், எத்தனை மனிதர்கள், உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்தார். 20க்கும் மேற்பட்ட ரியாலிட்டி ஷோக்களை நடத்தினார்.
8 வருடங்களுக்கு முன்பு பெரிய திரை, சின்னத்திரை இரண்டிலும் இருந்து விலகினார்.
தற்போது விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் தமிழ் கடவுள் முருகன் தொடரில் கங்காதேவியாக நடிக்கிறார் மீண்டும் நடிக்க விரும்பிய பிரியதர்ஷின் தமிழ் கடவுள் முருகன் ஆடிசனில் கலந்து கொண்டார். அதில் அவர் கங்காதேவியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். சற்று வெயிட் போட்டிருந்த அவரை கொஞ்சம் உடல் எடையை குறைக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு ஒப்புக்கொண்டு கணிசமான எடை குறைத்து கங்காதேவியாக நடித்து வருகிறார்.
"மீண்டும் நடிக்க வந்திருப்பது ஒது ஆத்ம திருப்திக்காகத்தான். முருகன் எனக்கு பிடித்த கடவுள். அதனால் இந்த தொடரில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது நடிக்கிறேன். தொடர்ந்து நடிப்பது பற்றி இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை" என்கிறார் பிரியதர்ஷினி.
நன்றி: தினமலர்
From: R.Latha
on 4th January 2019 05:51 PM
[Full View]
`காதல் கணவரை `டிக் டாக்'ல நடிக்க வைக்க நான் பட்ட பாடு இருக்கே...!" - `ராஜா ராணி' ஶ்ரீதேவி
``நான் மட்டும் பண்ணினா எப்படி? என் கணவர் முன்பு கொஞ்சம் தயங்கினார். அவரை நடிக்க வைக்க ரொம்ப மெனக்கெடுவேன்; மிரட்டவெல்லாம் செய்ய மாட்டேன்."
``காதல் கணவரை `டிக் டாக்'ல நடிக்க வைக்க நான் பட்ட பாடு இருக்கே...!
சின்னத்திரைப் புகழ் நடிகை ஶ்ரீதேவி, தன் காதல் கணவருடன் `டிக் டாக்'கிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார். அவரிடம் நடிப்பு, பர்சனல் விஷயங்கள் குறித்துப் பேசினோம்...
``நடிப்புப் பயணம் எப்படிப் போயிட்டு இருக்கு?"
``இப்போ விஜய் டிவி `ராஜா ராணி' சீரியல்ல நடிக்கிறேன். இந்த சீரியல் உட்பட மூணு சீரியல்கள்லதான் நெகட்டிவ் ரோல். நெகட்டிவா நடிக்கிறதும் ரொம்ப வித்தியாசமான அனுபவமா இருக்கு. ரெண்டு வருஷத்தைக் கடந்து சீரியல் ஒளிபரப்பாகுது. ஆனாலும் மக்கள் இன்னும் பாசிட்டிவ் ஶ்ரீதேவியாகவே என்னைப் பார்க்கிறாங்க. இந்த சீரியல் டீம் மொத்தமும் ஜாலியா சிரிச்சுப் பேசிட்டு இருப்போம். தினமும் வேலைக்குப் போகிறோம்ங்கிற உணர்வு இல்லாம சந்தோஷமா நடிக்கிறோம். தவிர, ஷூட்டிங் ஸ்பாட்ல ஃப்ரெண்ட்ஸ் பலரும் சேர்ந்து, `டிக் டாக்' வீடியோஸ் பண்ணுவோம். எங்களுக்குள் எக்கச்சக்க ஃபன் நடக்கும்."
``சின்னத்திரையில நீண்டகாலமா வேலை செய்ற அனுபவம் பற்றி..."
``ரொம்ப நல்லா இருக்கு. சின்னத்திரைக்கு வந்து பத்து வருஷம் முடிஞ்சுடுச்சு. இதனால, நிறைய அனுபவம் கிடைச்சுடுச்சு. ஆனாலும் போதும்ங்கிற எண்ணம் இன்னும் வரலை. ஒவ்வொரு சீரியலும் ஒவ்வொரு அனுபவம் கொடுக்கிறதால, உற்சாகமா நடிக்கிறேன். ஆனா, `எவ்வளவு அடிச்சாலும் தாங்குவா'னு சொல்ற மாதிரி, ரொம்பப் பாவப்பட்ட கேரக்டர் மற்றும் `அருந்ததி' மாதிரி பவர்ஃபுல் ரோல்ல நடிக்க ஆசை உண்டு."
``சினிமாவில் நடிக்க விருப்பமில்லையா?"
``காலேஜ்ல படிச்சுகிட்டு இருக்கும்போது, `புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' படத்தில் தனுஷூக்கு தங்கச்சியா நடிச்சேன். பிறகு படிப்பு, சின்னத்திரை நடிப்புனு பிஸியாகிட்டேன். அதனால, சினிமாவில் வாய்ப்புகள் வந்தும் நடிக்க முடியாம போச்சு. இப்போ சினிமாவில் நடிக்கத் தயார்தான்."
``உங்க கணவரும் நீங்களும் வளர்ப்புப் பிராணிகளின் பிரியர்கள். அந்த அனுபவம் பற்றி..."
``வளர்ப்புப் பிராணிகளின் மேல நாங்க கொண்டிருந்த அன்புதான், எங்க காதல் திருமணத்துக்கும் அஸ்திவாரம். என் கணவர் அசோக் சிந்தாலா, பெட் போட்டோகிராபர். பெங்களூருவில் ஐடி நிறுவனத்துல வேலை செய்துகிட்டே, போட்டோகிராபியிலயும் கவனம் செலுத்துறார். நான் சென்னையில இருந்தபடியே வளர்ப்புப் பிராணிகளின் நலனுக்கான சில செயல்பாடுகளைச் செய்கிறேன். எங்களில் ஒருவருக்கு ஃப்ரீ டைம் கிடைக்கிறபோது, இன்னொருத்தரை மீட் பண்ண கிளம்பிடுவோம். நாங்க வளர்க்கிற நாய்கள்தான், எங்களோட ஒருமித்த அன்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு. அவரோட போட்டோகிராபி வேலைக்கு என்னாலான உதவியைச் செய்றேன். அவரும் என் நடிப்புக்கு ரொம்ப உதவுவார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தும் என்னோடு நேரம் செலவிடுவார். வாழ்க்கை சந்தோஷமா போயிட்டு இருக்கு."
`` 'டிக் டாக்'ல தம்பதியா கலக்கறீங்க போல..."
(சிரிக்கிறார்) ``அப்படியெல்லாம் இல்லை! ஆக்டிங், டான்ஸ், எக்ஸ்பிரஷன்ஸ்னு நம்ம நடிப்பில் நிறைய வெரைட்டி காட்ட முடியும்னுதான், `டிக் டாக்'ல தொடர்ந்து வீடியோஸ் வெளியிடுறேன். நான் மட்டும் பண்ணினா எப்படி? என் கணவர் முன்பு கொஞ்சம் தயங்கினார். அவரை நடிக்க வைக்க ரொம்ப மெனக்கெடுவேன்; மிரட்டவெல்லாம் செய்ய மாட்டேன். இப்போ, வீடியோவில் நடிக்க என் கணவருக்கும் விருப்பம்தான். அதனாலதான் நாங்க இருவரும் சேர்ந்து நிறைய வீடியோஸ் ரிலீஸ் பண்றோம். அப்போ எங்களுக்குள் நிறைய காமெடி நடக்கும். இதனால எங்களை நிறைய பேர் பாராட்டுறாங்க" எனப் புன்னகைக்கிறார், ஶ்ரீதேவி.